மும்பை :மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக விரும்புவதாக அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஒன்று திரட்டி மாநிலத்தை ஆளும் பாஜக - சிவசேனாவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவார் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆதரவாளர்கள் 8 பேர் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டனர்.
ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாகவும், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தெரிவித்து உள்ள அஜித் பவார், கட்சியின் பெயர், சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்து உள்ளார்.
இதனிடையே, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் அணி மற்றும் அஜித் பவார் அணியின் ஆலோசனைக் கூட்டம் தனித் தனியாக நடைபெற்றது. மும்பை புறநகர் பகுதியான பாந்த்ராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அஜித் பவார், "மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக விரும்புவதாகவும், அதற்கு அவரது அரசியல் குருவான சரத் பவாரின் ஆசி வேண்டும் என்றும் தெரிவித்தார். எல்லோர் முன்னிலையில் தன்னை வில்லனாக சித்தரித்தார் என்றும் இருப்பினும் சரத் பவார் மீது தனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு என்றும் கூறினார்
ஐஏஎஸ் அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றும் ஏன் அரசியலில் பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். உதாரணத்திற்கு எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் அடுத்த தலைமுறையினர்க்கு வழிவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதாக தெரிவித்தார்.
83 வயதாகும் சரத் பவார் எப்போது நிறுத்தப் போகிறார் என்றும் அவரது ஆசிர்வாதம் வழங்க வேண்டும் என்றும் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ அவருக்காக பிரார்த்திப்பதாகவும் அஜித் பவார் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உள்ள 40 எம்.எல்.ஏக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அஜித் பவார் கூறினார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலை ஏகநாத் ஷிண்டே தலைமியிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் எதிர்கொள்ளப் போவதாக அஜித் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பல தலைவர்கள் விலக காரணமாக இருந்தவரையே தற்போது கட்சி உயர்த்தி உள்ளதாக பெயர் குறிப்பிடாமல் ஜிதேந்திர அவாத்தை, மறைமுகமாக அஜித் பவார் சாடினார்.
மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை மக்களிடம் தெரிவிக்க உள்ளதாகவும் அஜித் பவார் கூறினார். அதிகபட்ச உறுப்பினர்களின் ஆதரவு தங்கள் பக்கமே உள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கு உரியது என்றும் அஜித் பவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க :தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயர், சின்னம் யாருக்கு? இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு!