மகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் ஒலிபெருக்கிகளை நீக்கும்படி, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனை தலைவர் ராஜ் தாக்கரே அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். மே 3ஆம் தேதிக்குள் மசூதிகளில் உள்ள ஒலிப்பொருக்கிகளை நீக்காவிட்டால், இந்துக்கள் அனைவரும் மசூதி முன்பு குவிந்து, ஹனுமன் சாலிசா பாடுவோம் என எச்சரித்திருந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராஜ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், "அரசுக்கு கட்டளையிடும் வகையில் யாரும் பேசக்கூடாது என்று தெரிவித்தார்.
சர்வாதிகாரம் செய்யும் வகையில் பேச வேண்டும் என்றால், அவரவர் வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக் கொள்ளுங்கள், ஆனால் பொதுவெளியில் அவ்வாறு பேசக் கூடாது என்று தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டப்படியே அரசாங்கம் நடத்தப்படுகிறது, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.