மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்துதுறை இணை அமைச்சர் விகே சிங் உறுப்பினர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார். அதில், கோவிட் பெருந்தொற்று காலத்தில் விமானப் போக்குவரத்துதுறையில் ஏற்பட்ட இழப்பு குறித்த தகவலை வெளியிட்டார். அதன்படி, பெருந்தொற்று காலத்தில் விமானநிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடியும், விமான நிலையங்களுக்கு ரூ.5,116 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தகைய இழப்பை சந்தித்துள்ள துறையை மீட்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் அவர் கூறுகையில், விமான கட்டணங்கள் அரசால் ஒழுங்குமுறைப்படுத்தப்படவில்லை. விமான போக்குவரத்து 1937-ன் விதிகளின் கீழ் விமான நிறுவனங்கள் நியாயமான கட்டணத்தை தாங்களாகவே நிர்ணயித்துக் கொள்ளலாம். விமான கட்டணங்கள், விமான நிறுவனங்களின் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.