குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் மொரினாவில் 2 ராணுவ விமானங்கள் இன்று (ஜனவரி 28) விபத்துக்குள்ளாகின. இந்திய விமானப்படையின் சுகோய்-சு 30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் விபத்தில் சிக்கின. இந்த விபத்தின்போது மிராஜ் 2000 விமானத்தில் ஒரு விமானி இருந்துள்ளார். சுகோய் 30 விமானத்தில் 2 விமானிகள் இருந்துள்ளனர். இதில் சுகோய் விமானிகள் 2 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
ஆனால், மிராஜ் விமானத்தின் விமானியை படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் மற்றும் இந்திய விமானப் படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆகியோருடன் விசாரித்துவருவதாக பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானங்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் போர் விமானம் இன்று (ஜனவரி 28) விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படையின் ட்விட்டர் பக்கத்தில், இந்திய விமானப்படையின் 2 போர் விமானங்கள் குவாலியர் அருகே இன்று காலை விபத்தில் சிக்கியது. வழக்கமான பயிற்சியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மூன்று விமானிகளில் ஒருவருக்கு உயிருக்கு ஆபாத்தான வகையில் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராஜஸ்தானில் மிக் போர் விமானம் விபத்துக்குள்ளானது