ஜெய்ப்பூர் : பணி நேரம் முடிந்ததால் மேற்கொண்டு வேலை பார்க்க முடியாது என ஏர் இந்தியா விமானி கூறியதால், லண்டனில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய பயணிகள், ஜெய்ப்பூரில் 6 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு மீண்டும் சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவின் AI Flight 112 என்ற விமானம் கிளம்பியது. டெல்லிக்கு அதிகாலை 4 மணிக்கு அந்த விமானம் சென்றடைய வேண்டிய நிலையில், மோசமான வானிலை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்டது. ஏறத்தாழ 2 மணி நேரம் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில், டெல்லி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.
ஏறத்தாழ 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மேற்கொண்டு விமானத்தை இயக்க விமானி மறுப்பது தெரிய வந்தது. தனது பணி நேரம் முடிந்து விட்டதாகவும், சிவில் உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் விதிகளின் படி தன்னால் கூடுதல் நேரம் பணியாற்ற முடியாது என விமானி கூறியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக விமானம் மேற்கொண்டு நகர முடியாமல் இயங்கா நிலைக்கு திரும்பியது. கடும் விரக்திக்குள்ளான பயணிகள் விமான நிலையத்தில் காத்திருப்பது, ஏர் இந்தியா ஊழியர்களுடன் விவாதிப்பது தொடர்பான வீடியோக்களை ட்விட்டரில் பதிவிட்டு மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்த சிந்தியாவிடம் முறையிட்டனர்.