டெல்லி : ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஹிமானில் குமார். 37 வயதான ஹிமானில் குமார் டெல்லி விமான நிலையத்தில் இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஹிமானில் குமாரை உடனடியாக மீட்டு சிபிஆர் உள்ளிட்ட முதலுதவிகள் செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஹிமானில் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. முதலுதவி சிகிச்சை அளித்து விரைந்து மருத்துவமனையில் அனுமதித்த போது ஹிமானில் குமாரை காப்பாற்ற முடியாமல் போனது சக விமானிகள் மற்றும் பணியாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
பணிச் சுமை காரணமாக ஹிமானில் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக என நடத்திய விசாரணையில் டிஜிசிஏ மூத்த அதிகாரி ஈ.டிவி செய்தி நிறுவனத்திற்கு பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி ஹிமானில் குமார் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாகவும் அதில் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார்.
மேலும் அந்த மருத்துவ சான்று அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்பதால் அவர் வேறேதோ பிரச்சினை காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று கூறினார். கடந்த மூன்று மாதங்களில் ஹிமானில் குமாருடன் சேர்த்து 3 விமானிகள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி நாக்பூர் விமான நிலையத்தின் போர்டிங் கேட் அருகே நிலைகுலைந்து உயிரிழந்தார். புனே செல்ல இருந்த விமானத்தை அவர் இயக்க இருந்த நிலையில், திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டு இருந்த கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானி பணியின் போது திடீரென உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விமான பயணித்தின் இடையே விமானிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சக விமானிகள் மற்றும் பயணிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டிஜிசிஏ விசாரணை நடத்தக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :Watch: குழந்தைகளுடன் குறும்பு! பிரதமர் மோடியின் வீடியோ வைரல்!