திருவனந்தபுரம்:கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து இன்று (பிப். 24) காலை IX 385 என்னும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் சவூதி அரேபியாவின் தம்மம் நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 182 பயணிகள் இருந்தனர். திருவனந்தபுரம் வான் பரப்பில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகள் அறிந்தனர்.
இதையடுத்து உடனடியாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினர். அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவரச நிலை அறிவிக்கப்பட்டது. பிற்பகல் 12.15 மணியளவில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. இதில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமான தொழில்நுட்பக் குழுவினர் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாலை அனைத்து பயணிகளும் வேறு விமானத்தில் சவூதி அரேபியாவின் தம்மம் நோக்கி புறப்பட்டனர். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருவனந்தபுரம் விமான நிலையம் தரப்பில், தொழில்நுட்பக்கோளாரை கண்டறிந்த விமானிகள் காலை 11.03 மணிக்கு விமானத்தை தரையிறக்க திட்டமிட்டு அனுமதி கோரினர்.
அந்த நேரத்தில் பல்வேறு விமானங்கள் ஓடுபாதையில் இருந்ததால், பிற்பகல் 12.15 மணிக்கு தரையிறக்க அனுமதி வழங்கினோம். இதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து முடித்தோம். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விமானம் வான்பரப்பில் சுற்றிவந்த நிலையில், 12.15 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:"நூறாண்டு காலம் வாழ்க".. மருத்துவமனையில் நடந்த திருமணம்.. நெகிழ்ச்சியில் தொடங்கிய வாழ்க்கை..