கொச்சி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று(மார்ச்.8) பஹ்ரைனில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு வழியாக கொச்சி விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தின் கேபின் க்ரூவில் பணிபுரியும் ஷாபி என்ற ஊழியர் தங்கம் கடத்த முயற்சிப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சுங்கத்துறையினர் விமானப் பயணிகள் மற்றும் ஊழியர்களை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் கொச்சி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய உடனே, விமானத்தில் இருந்து ஷாபி அவசர அவசரமாக வெளியேறினார். இதைக் கண்ட அதிகாரிகள் ஷாபியை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஷாபி 1.4 கிலோ எடை கொண்ட தங்கப் பசையை தனது கைகளில் சுற்றிவைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைகளில் தங்கப் பசையை வைத்து கட்டி, அதனை முழுக்கை சட்டையால் மூடியிருந்ததாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தங்கத்தின் மதிப்பு சுமார் 75 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவரிடமிருந்து 1,487 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட ஷாபி கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தங்கக் கடத்தலில் ஈடுபட்ட ஊழியர் ஷாபி உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை தங்களது நிறுவனம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளது. முழுமையாக விசாரணை முடிந்த பிறகு, ஷாபி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் அவரை பணியில் இருந்து நீக்கவும் தயங்க மாட்டோம் என என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.