திருவனந்தபுரம்(கேரளா): ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நேற்று மாலை முதல் திறக்கப்பட்டுள்ளது. புதிய மேல் சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகப்புரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் ஹரிஹரன் நம்பூதிரியும் தேர்வாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மேல் சாந்தி என்பவர் அதிகாரம் மிக்கவர். ஐயப்பன் கோயில் யாத்திரை செல்லும் பக்தர்கள் மேல் சாந்தியை சந்தித்து ஆசிப்பெறுவர். கோயில் நடை திறந்து பூஜைகளை தொடங்கி வைப்பது, நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பது வரை அனைத்து அதிகாரமும் மேல் சாந்திக்கு உள்ளது.
வேதங்கள், தாந்திரீகம், சாஸ்திரம் கற்றவர்கள் வேறு பிரபல கோயில்களில் மேல் சாந்தியாக பணியாற்றியவர்கள் மட்டுமே மேல் சாந்தியாக முடியும். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல் சாந்தியாக பணியாற்றுவது பாக்கியம் என்று பலரும் கருதுவர்.
ஐயப்பன் கோயில் நடை திறப்பு:ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலையில் திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெற்றது.
மேல் சாந்தி தேர்வு: தந்திரி முன்னிலையில் புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நடைபெற்றது. நேர்காணல் மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 10 பேரின் பெயர்கள் ஒரு வெள்ளி குடத்திலும், மேல்சாந்தி என எழுதப்பட்ட ஒரு துண்டு சீட்டுடன் ஒன்றும், எழுதாத 9 துண்டு சீட்டுகள் மற்றொரு வெள்ளி குடத்திலும் போடப்பட்டது.