ஹைதராபாத்:குஜராத் மாநில சட்டப்பேரவை 2 கட்டங்களாக நடக்கிறது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5ஆம் 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒரு வாரமே உள்ளதால் மும்முனை போட்டியாளர்களான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் உச்ச கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளன. அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் செல்வாக்கு உள்ள கட்சிகளும் போட்டியிடுகின்றன. அந்த வகையில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் பல தொகுதிகளில் களமிறங்கியுள்ளது. இப்படி பாஜகவுக்கு பல கட்சிகள் போட்டியாக வந்துள்ளன. பல்வேறு தேர்தல் வியூகங்களும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சிகள் பாஜக வாங்குவங்கியில் சரிவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கின்றன.
ஆனால், மும்மூர்த்திகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணியாக இணைந்தால் மட்டுமே, பாஜகவை எதிர்கொள்ளவோ, வீழ்த்தவோ முடியும், தனித்தனியாக போட்டியிட்டால் பாஜகவுக்கு எதிரான ஓட்டுகள் மூன்று கட்சிகளுக்கும் பிரிந்துசெல்லுமே தவிர பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் ஈடிவி பாரத் செய்தி ஆசிரியர் பிலால் அகமது பட். இதுகுறித்து அவர் எழுதுகையில், குஜராத்தில் சிறுபான்மை வாக்காளர்கள் அதிகமுள்ள 14 தொகுதிகளில் ஏஐஎம்ஐஎம் போட்டியிடுகிறது. அதில் 12 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஏஐஎம்ஐஎம் கட்சியின் இந்த முடிவு பாஜக அல்லாத மாற்று கட்சிகளுக்கு பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளைப் போலல்லாமல், பாஜகவுக்கென தனி வாக்குவங்கி உள்ளது.
இந்த வாக்குவங்கி மாறப்போவதில்லை. மாறாக, பாஜக எதிர்ப்பு வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இதனால் வாக்குகள் பிரிந்துவிடுமே தவிர பாஜகவுக்கு எதிராக ஒன்று சேராது. அண்மையில் பிகாரின் கோபால்கஞ்ச் தொகுதியில் நடந்துமுடிந்த இடைத்தேர்தல் இதற்கு ஒரு நல்ல உதாரணம். எதிர்க்கட்சிகளின் வெற்றி வாய்ப்பை ஏஐஎம்ஐஎம் எவ்வாறு பிரித்தது அந்த தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பாஜகவுக்கும் தோல்வியடைந்த ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கும் 1,794 வாக்குகள் மட்டுமே வித்தியாசம். அதே தொகுதியில் ஏஐஎம்ஐஎம் போட்டியிட்டு 12,214 வாக்குகளை பெற்றது. இந்த வாக்குகளே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தோல்வியடைந்ததற்கு காரணம். ஒருவேளை ஏஐஎம்ஐஎம் போட்டியிடவில்லை என்றால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கும்.
இந்த நிலைமையே குஜராத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்தும். குஜராத்தின் ஜமால்பூர் மற்றும் காடியாவில் 2 முஸ்லிம் வேட்பாளர்களை ஏஐஎம்ஐஎம் களமிறக்கியுள்ளது. இவர்கள் நேரடியாக காங்கிரஸ் ஓட்டுகளை பிரிக்க அதிகவாய்ப்புள்ளது. இது பாஜகவுக்கு பலன் அளிக்கும். வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே அசாதுதீன் ஓவைசியை பாஜகவின் பி டீம் என்றும், பாஜகவுக்கு சாதகமாகவே வேட்பாளர்களை அவர் நிறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இவர் நிறுத்தும் பல வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு இல்லாதவர்களே என்ற கருத்தும் உள்ளது. இந்த தகவல்கள் வெளியான சில நாள்களில் பாபுநகர் தொகுதி வேட்பாளரை ஓவைசி வாபஸ் பெற்றார். இதன்மூலம் பாஜகவின் பி டீம் அல்ல என்பதையும் சொல்ல முற்பட்டிருக்கிறார். ஆனால், இது தேர்தல் கண்துடைப்பு போல உள்ளது.