டெல்லி: கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே தற்போது மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து, 2 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்குப் பரிசோதிக்கப்பட உள்ளது.
2ஆவது, 3ஆவது கட்ட கிளினிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு கடந்த மே.12ஆம் தேதி இதற்கு அனுமதியளித்துள்ளது.
இந்த திட்டத்தின் பரிசோதனை டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ் உட்பல பல்வேறு மருத்துவமனைகளில் நடத்தப்படுகிறது. ஏற்கெனவே, 12 முதல் 18 வயதுடைய பிரிவினருக்கு தடுப்பூசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தொடங்கி 6 முதல் 12 வயது சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தி டெல்லி எய்ம்ஸ் பரிசோதிக்கவுள்ளது.