டெல்லி:முன்னதாக கடும் நஷ்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனம், தற்போது கரோனா ஊரடங்கினால் பெரும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்ததாகக் கூறி அந்நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளுக்கு பெருமளவு ஊதியம் குறைக்கப்பட்டது. முதலில் 10 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்த நிறுவனம் பின்னர் படிப்படியாக 25 விழுக்காடு, 60 விழுக்காடு என ஊதியத்தில் பிடித்தம் செய்தது. இதனால், விமானிகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகினர்.
ஊதியக் குறைப்பு விவகாரத்தில் சுமூகமான முடிவை எட்டுங்கள்- விமானிகள் கடிதம்
ஏர் இந்தியா நிறுவனத்தில் பணபுரியும் விமானிகளுக்கு அதிகப்படியான ஊதியக் குறைப்பு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதால், தங்களின் பொருளாதார நிலை அறிந்து இந்த விவகாரத்தில் சுமூகமான முடிவினை எடுக்கவேண்டும் என விமானிகள் கூட்டமைப்பினர் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதனால் தங்களது குழந்தைகள் பள்ளிப் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வயதான பெற்றோர்களை கவனிக்க முடியாமல் தடுமாறுவதாகவும் வருத்தம் தெரிவித்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு விமானிகள் கூட்டமைப்பினர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், "ஊதியக் குறைப்பால் நாங்கள் அனைவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளோம். இதன் காரணமாக தங்களது வாழ்க்கை மிகுந்த சிரமத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையிலும், ஊதியக் குறைப்பை தொடர்வது தங்களை மேலும் பாதிக்கும் செயலாக உள்ளது. எனவே, விமானிகளின் ஊதியக் குறைப்பு விவகாரத்தில் விரைந்து ஆலோசித்து தங்களுக்கு சுமூகமான முடிவினை தெரிவியுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.