தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகமதாபாத் டெஸ்ட் போட்டி: இந்திய அணி நிதான ஆட்டம்-சுப்மன் கில் அபார சதம்! - இந்திய அணி நிதான ஆட்டம்

அகமதாபாத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார்.

சுப்மன் கில் சதம் விளாசல்
சுப்மன் கில் சதம் விளாசல்

By

Published : Mar 11, 2023, 3:21 PM IST

அகமதாபாத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது. தொடர்ந்து, இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, கடந்த 9ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தொடங்கியது. இப்போட்டியை பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிலையில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் கவாஜா சிறப்பாக விளையாடி 180 ரன்கள் குவித்தார். இதேபோல் ஆல் ரவுண்டரான கேமரூன் க்ரீன் 114 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார்.

மர்பி 41, கேப்டன் ஸ்மித் 38, லயன் 34, ட்ராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆஸ்திரேலிய அணி 480 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 6 விக்கெட்களையும், ஷமி 2, ஜடேஜா, அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்கள் எடுத்திருந்த போது குன்னமென் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகியோர் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கில் சதம் விளாசி அசத்தினார். இது சர்வதேச அரங்கில் அவர் அடிக்கும் 2வது டெஸ்ட் சதம் ஆகும். இந்நிலையில் 42 ரன்கள் எடுத்திருந்த போது மர்பி பந்துவீச்சில் புஜாரா ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி இப்போட்டி தொடங்க உள்ளது.

முன்னதாக, 4வது டெஸ்ட் போட்டி நிறைவடைந்த பின் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் ஒருநாள் போட்டி மார்ச் 17ம் தேதி மும்பையிலும், 2வது போட்டி மார்ச் 19ம் தேதி விசாகப்பட்டினத்திலும், 3ம் ஒருநாள் போட்டி மார்ச் 22ம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:டெல்லி 'ஹோலி' விழாவில் ஜப்பான் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. குஷ்பூ கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details