குஜராத்:உலகத்தைச் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால், அந்த சுற்றுலாவைத் தனித்துவமாக்குவதும், பிறரது கவனத்தை ஈர்ப்பதும் மிக அரிது. அந்த வகையில்தான், குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் அங்கிருந்து லண்டன் வரை விண்டேஜ் காரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். சாலை மார்க்கமாக 16 நாடுகளைக் கடந்து சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்கவுள்ளனர். அது மட்டுமின்றி அவர்கள் தங்கள் பயணத்தை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக மாற்றும் வகையில், அதை ஆவணப்படமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களின் இந்தப் பயணம் வரும் அக்டோபர் மாதம் லண்டனைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகமதாபாத்தைச் சேர்ந்த தமன் தாகூர் என்பவருக்குச் சொந்தமான இந்த காரை, அவருக்கு மூன்று வயது இருக்கும்போது அவரது தந்தை தேவல் தாகூர் வாங்கியுள்ளார். அன்று முதல் இந்த காரின் கதையைக் கேட்டு வளர்ந்த தமன் தாகூர், தான் இளம் பருவத்தை எட்டிய உடனேயே அதன் பராமரிப்பில் கவனம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தங்களின் நீண்ட நெடிய வாழ்க்கை பயணத்தில் குடும்ப உறுப்பினராகவே மாறிய அந்த விண்டேஜ் காருக்கு, லால் பாரி மற்றும் ரெட் ஃபேரி எனச் செல்ல பெயர் வைத்து, அந்த குடும்பம் அழைத்து வருகிறது.
சாலையில் சென்றால் அனைவரது கண்களும் திரும்பிப் பார்க்கும் வகையில் 'பளீச் என்ற பிங்' நிறத்தில் உள்ள விண்டேஜ் காருக்கு தற்போது 73 வயதாகிறது. பழமையான இந்த காரை பராமரிக்கத் திட்டமிட்ட தமன் தாகூர், கனடா போன்ற வெளிநாடுகளில் இருந்து உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்து காரை புதுப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சாலை மார்க்கம் செல்ல கடந்த இரண்டு ஆண்டுகளாக தமன் தாகூர் திட்டமிட்டுள்ளார்.
இதையும் படிங்க:செந்தில் பாலாஜி மீதான வழக்கை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!