டெல்லி:நாட்டில் விவசாயத் துறையின் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், பிரதமர் மோடி ஆட்சியில் 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வேளாண்துறைக்காக மட்டும் ரூ.6,21,940.92 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேல் தெரிவித்தார். இதுகுறித்து டெல்லியில் இன்று (டிசம்பர் 14) செய்தியாளர்களை சந்தித்த பிரஹலாத் சிங் பட்டேல் கூறுகையில், 2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை வேளாண்துறைக்கான மத்திய பட்ஜெட் ரூ.1,48,162.16 கோடியாக இருந்தது.
ஆனால், 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வேளாண்துறைக்கான பட்ஜெட் ரூ.6,21,940.92 கோடியை எட்டியுள்ளது. பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மூன்று தவணைகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. இதுவரை ரூ.2.16 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.