புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட அக்னிபாத் ஆட்சேர்ப்புத் திட்டம், நான்கு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ராணுவ அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய முன்மொழிகிறது.
ஆனால், இவர்கள் இறுதி ஓய்வூதிய பலன்களை பெறுவதற்கு நிர்ணயிக்கும் பரிசீலனைக்கு தகுதி பெற மாட்டார்கள். எனவே, இத்திட்டத்திற்கு எதிராக ராணுவத்தில் பணிபுரிவதை தங்களது கனவாகக் கொண்ட பல இளைஞர்கள் நாடு முழுவதும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், சில இடங்களில் நடைபெற்ற இளைஞர்களின் போராட்டம் வன்முறையாகவும் மாறியது. குறிப்பாக, பல்வேறு இடங்களில் ரயில்களுக்கு தீ வைத்து, இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு வருவதால், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 35 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில், 13 ரயில் சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
அக்னிபாத் போராட்டம்: நாடு முழுவதும் ரயில் சேவைகள் முடக்கம்! மேலும், இன்று (ஜூன் 17) காலை தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்த ஹைதராபாத் - கொல்கத்தா செல்லும் பயணிகள் ரயிலுக்கு, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தீ வைத்தனர். இதனால், ஹைதராபாத்தின் மெட்ரோ ரயில் சேவைகளை ரத்து செய்வதாக தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, லிங்கம்பள்ளி - ஹைதராபாத், ஹைதராபாத் - லிங்கம்பள்ளி, ஃபலகுன்மா - லிங்கம்பள்ளி, லிங்கம்பள்ளி - ஃபலகுன்மா, ஃபலகுன்மா - ஹைதராபாத் மற்றும் ராமச்சந்திராபுரம் - ஃபலகுன்மா ஆகிய வழித்தடங்களுக்கு இடையிலான மெட்ரோ ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, கிழக்கு மத்திய இரயில்வே எல்லைக்கு உட்பட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் அக்னிபாத் போராட்டம் காரணமாக 8 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும், 12335 எண் கொண்ட மால்டா டவுன் - லோக்மான்ய திலக் (டி) எக்ஸ்பிரஸ் மற்றும் 12273 எண் கொண்ட ஹவுரா - புது டெல்லி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மத்திய இரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் ஏகலப்ய சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அக்னிபாத் திட்டம்: அக்னி வீரர் பணிக்கு சேர்வது எப்படி ? எவ்வளவு சம்பளம் ? சலுகைகள் என்ன ?