டெல்லி: ஒன்றிய அரசு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கும் 'அக்னிபத்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டமும், வன்முறையும் நடைபெற்றன. அக்னிபத் திட்டத்தை திரும்பப்பெறும் எண்ணமே இல்லை என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அக்னிபத் திட்டம் உடனடியாக முடிவு செய்து கொண்டு வரப்படவில்லை எனவும், 2 ஆண்டுகளுக்கு மேல் தீவிர ஆலோசனைக்குப் பிறகு கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு 2 ஆண்டுகள், 254 கூட்டங்கள் நடத்தப்பட்டு 750 மணிநேரத்திற்கு மேலான ஆலோசனைக்குப் பிறகு 'அக்னிபத்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னிபத் திட்டம் குறித்து ராணுவ அலுவலர் ஒருவர் கூறுகையில், "பயிற்சி விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. முன்பு ராணுவ வீரர்கள் 9 மாதங்கள் பயிற்சிபெறுவர். 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் சேரும் அக்னிவீரர் 6 மாதங்கள் மட்டுமே பயிற்சி பெறமுடியும்" என்றார்.