டெல்லி :இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங் பதவி விலகக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் தள்ளிப்போனது. ஏறத்தாழ 11 மாதங்களுக்கு பிறகு தேர்தல் நடைபெற்ற நிலையில், சஞ்சய் சிங்கிற்கும், காமல்வெல்த் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை அனிதா ஷெரோனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
வாக்குப் பதிவு நிறைவு பெற்ற நிலையில், எண்ணிக்கையில் சஞ்சய் சிங் 40 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட அனிதா ஷெரோன் 7 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவரான சஞ்சய் சிங் அம்மாநில மல்யுத்த சம்மேளனத்தின் துணை தலைவராக இருந்தார்.
தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாக குழு உறுப்பினராகவும் கடந்த 2019ஆம் ஆண்டு சம்மேளனத்தின் இணைச் செயலாளராகவும் அவர் பதவி வகித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராக அறியப்படும் சஞ்சய் சிங், பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசி எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.