பெங்களூரு :கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றும், மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தினர். மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர முனைப்புடன் காத்திருக்கின்றன.
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவைப்படும் நிலையில் கடந்த 2018 சட்டப்பேரவைத் தேர்தலில், 104 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. இருப்பினும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சியும், 33 இடங்களைக் கைப்பற்றிய மதச்சார்பற்ற ஜனதா கட்சியும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின.
இந்த கூட்டணி தொடக்கத்தில் இருந்தே பல்வேறு முரண்பாடுகளை சந்தித்து வந்த நிலையில், 14 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களும், மூன்று மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்களும் பாஜகவுக்கு கட்சி தாவியதால் ஆட்சி கலைந்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி கலைந்த நிலையில் கட்சித் தாவல் எம்எல்ஏ.க்கள் உதவியுடன் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
முதலில் எடியூரப்பா முதலமைச்சராக இருந்த நிலையில், பின்னாட்களில் அவரிடம் இருந்து முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டு பசவராஜ் பொம்மையிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை Times Now, ABP-C Voter, Zee News, NewsX-CNX, Axis My India, Republic TV, TV 9 உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.
அதில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவும் கடும் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு உள்ள கருத்துக் கணிப்பில் மாநிலத்தில் தொங்கு சட்டபை அமையும் எனக் கூறப்படுகிறது.
ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு:
பாஜக: 85- 100
காங்கிரஸ்: 94 - 108
மஜத: 24 - 32
பிற கட்சிகள்: 2 - 6