ஐதராபாத் : பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்று இருந்தார். பின்னர், லட்சத்தீவு பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "லட்சத்தீவுகள் வெறும் தீவுகளின் கூட்டமல்ல என்றும் அது காலம் காலமாக நீடித்து வரும் அம்மக்களின் பாரம்பரியம் என்றும், நீங்கள் சுவாரஸ்யமிக்க மற்றும் நல்லதொரு பயண அனுபவத்தைப் பெற விரும்பினால், உங்கள் பயணப் பட்டியலில் லட்சத்தீவும் இடம் பெற வேண்டும்" என பதிவிட்டார்.
பிரதமர் மோடியின் பதிவுக்கு மாலத்தீவு அமைச்சர்கள் பல்வேறு அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அரசின் அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் அவதூறு கருத்து சர்ச்சையாக வெடித்தது. பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் போர்க் கொடி தூக்கத் தொடங்கினர்.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரை இடைநீக்கம் செய்து மாலத்தீவு அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், 3 அமைச்சர்களின் கருத்து தனிப்பட்ட கருத்துகள் என்றும் அரசு சார்ந்தது இல்லை என்றும் மாலத்தீவு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து உள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், விளக்கம் கேட்டு உள்ளது. இது ஒருபுறம் இருக்க சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாலத்தீவை புறந்தள்ள வேண்டும் என சமூக வலைதளங்களில் முழக்கங்கள் எழுந்து உள்ளன.