டெல்லி :மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியை அடுத்து நாளை (ஆகஸ்ட். 1) காலை 11 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் தொடங்கியது. நாடாளுமன்றம் தொடங்கியது முதலே மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் கலவரச் சம்பவங்கள் மற்றும் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தை அமைதியான முறையில் நடத்து பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் கொடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார் என நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
இதை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி மணிப்பூர் விவகாரம் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக பிரதமர் மோடி தான் விளக்கம் அளிக்க வேண்டும் என முறையிட்டனர். மேலும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்தது.