டெல்லி : இமாச்சல பிரதேசம், கர்நாடக என அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் காங்கிரஸ் கட்சி தற்போது தெலங்கானா மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானாவில் ஆட்சியைக் கைப்பற்றுவது குறித்து தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றது முதலே சீரிய நடவடிக்கையில் களமிறங்கி உள்ள மல்லிகார்ஜூன கார்கே அண்மையில் சொந்த மாநிலமான கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றி கொடுத்து அதீத கவனத்தை ஈர்த்து உள்ளார். இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கேவின் பார்வை தெலங்கானா பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சர் கே சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை (பிஆர்எஸ்) விட்டு வெளியேறிய அதிருப்தி தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை நடத்தி உள்ளார்.
பாரதிய ரஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி. பொங்குலெட்டி ஸ்ரீவாஸ் ரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜுபள்ளி கிருஷ்ணா ராவ் மற்றும் சில பிஆர்எஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து பிரிந்து மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி தலைமையில் தங்களை காங்கிரசில் இணைத்துக் கொண்டனர்.
பிஆர்எஸ் கட்சியில் இருந்து அதிருப்தி காரணமாக மூத்த தலைவர்கள் விலகி உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதால், மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 80 இடங்களை கைப்பற்ற மல்லிகார்ஜூன கார்கே திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.