பெங்களூரு(கர்நாடகா):ட்விட்டரில் ஹிந்தி மொழி குறித்து கன்னட நடிகர் கிச்சா சுதீப்பிற்கும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் இடையேயான விவாதம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இதனையடுத்து கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்கள் இதுகுறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவின் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமய்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹிந்தி ஒரு போதும் நமது தேசிய மொழியாகாது. இதற்கு முன்னும் அப்படி இருந்ததில்லை.
நம் நாட்டின் மொழி வேற்றுமைகளை மதிப்பது இந்தியரான அனைவரின் கடமையாகும். ஒவ்வொரு மொழிக்கும் தனிப் பண்பும் பெருமைக்குரிய வரலாறும் உண்டு. நான் கன்னடராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்..!” எனத் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் கர்நாடக முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் முக்கியத் தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி இதுகுறித்து, “ஹிந்தி தேசிய மொழி அல்ல என்று நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்த கருத்து சரியானதே. அதில் ஒரு தவறும் இல்லை. நடிகர் அஜய் தேவ்கனின் செயல், மிக மலிவான செயலாக உள்ளது. இந்தியா பல மொழிகளின் தோட்டம். பல கலாசாரங்கள் தோன்றிய பூமி. இதை யாரும் குலைக்க நினைக்கக் கூடாது.
பெரும்வாரியான மக்கள் ஹிந்தி பேசுவதினால், அது தேசிய மொழி ஆகிவிடாது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒன்பதிற்கும் குறைவான மாநிலங்களில் தான் ஹிந்தி இரண்டாவது மொழியாகவோ, மூன்றாவது மொழியாகவோ பேசப்படுகிறது. இந்நிலையில், அஜய் தேவ்கனின் கருத்து எப்படி சரியாகும்..?, டப் செய்யாதீர்கள் என்று சொல்வதில் என்ன அர்த்தம்..? “ என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து, இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறுகையில், “ நமது மாநிலங்கள் மொழிகளால் உருவானது. இங்கு மாநில மொழிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. சுதீப்பின் கருத்து சரியானது. அதை அனைவரும் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரஜினி தமிழருவி மணியன் சந்திப்பு - 'மீண்டும் முதல்ல இருந்தா' என ரசிகர்கள் கிண்டல்!