சங்ரூர்:நடைபெற்று முடிந்த ஐந்து மாநிலத் தேர்தலில் பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்ற வெற்றிதான் நாட்டையே திரும்பிப் பார்க்கவைத்தது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி அங்கு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி சார்பாக பஞ்சாப் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பகவந்த் சிங் மாண், இன்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா ஆகியோரை சந்தித்தார்.
திமிர் பிடித்தவர்கள் தூக்கியெறியப்பட்டனர்
இச்சந்திப்பிற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் சிங் மாண், "மக்கள் திமிர் பிடித்தவர்களை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, எளிய மக்களை ஆட்சியில் அமரவைத்துள்ளனர்" என காங்கிரஸின் தோல்வியைச் சுட்டிக்காட்டி கூறினார்.