மும்பை : 1997ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஜாமீன் பெற்று தலைமறைவான நிழல் உலக தாதா சோட்டா ஷகீலின் கூட்டாளி லைக் அஹ்மத் பிடா ஹூசைன் ஷேக்கை ஏறத்தாழ 25 ஆண்டுகள் கழித்து மகாராஷ்டிர போலீசார் கைது செய்து உள்ளனர்.
சோட்டா ஷகீலின் கூட்டத்தை சேர்ந்த லைக் அகமது ஹூசைன் (வயது 50) துப்பாக்கிச் சூட்டில் கைதேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. கடந்த 1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டத்தை சேர்ந்த முன்னா தாரி என்பவரை சுட்டுக் கொன்ற வழக்கில் லைக் அகமது ஹூசைனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கில் கடந்த 1998 ஆம் ஆண்டு லைக் அகமது ஹூசைனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியேறிய லைக் அகமது ஹூசைன் மீண்டும் சிறை திரும்பவில்லை என்றும் வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தலைமறைவான அவரை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். அதிலிருந்து போலீசார் லைக் அகமது ஹூசைனை தேடி வருகின்றனர். ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், மகராஷ்டிரா மும்ரா பகுதியில் லைக் அகமது ஹூசைன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.