டெல்லி: வழக்கின் தீவிரம் கருதி ஜார்க்கண்ட் நீதிபதி கொலை வழக்கு சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் நடைபயிற்சி சென்ற போது ஆட்டோ மோதி கொல்லப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இதில் ஈடுபட்ட நபர்களை பிடிக்கும் பணியில் 22 பேர் அடங்கிய தனிப்படையை மாநில காவல்துறை அமைத்தது. இந்நிலையில் வழக்கை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. வழக்கின் விவரங்களை மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.