டெல்லி:நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29 அன்று தொடங்கி நடைபெற்றுவந்தது. கூட்டத்தொடர் நாளை (டிசம்பர் 23) வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இன்றுடன் நிறைவடைந்தது.
தேர்தல் சட்டத் திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் தேர்தல் சட்டத் திருத்த மசோதா நேற்று முன்தினம் (டிசம்பர் 20) மக்களவையில் நிறைவேறிய நிலையில் நேற்று (டிசம்பர் 21) மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த கூட்டத்தொடரில் அவையில் விதிமீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக இக்கூட்டத்தொடர் முழுமைக்கும் கலந்துகொள்ள 12 எதிர்க்கட்சி எம்பிக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இக்கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சியினர் அவையை நடத்தவிடாமல் கடும் அமளியிலும் கூச்சலிலும் ஈடுபட்டனர். இதேபோல் லக்கிம்பூர் கெரி சம்பவம் தொடர்பாகவும் நாடளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கிவந்ததால் நாளை வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அதன்படி, இரு அவைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்: மைக்கைப் பிடுங்கி திமுகவினர் அடாவடி