லக்னோ : உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கல்யாண் சிங் சிகிச்சைபெற்றுவரும் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை (ஆக.20) நேரில் சென்றார்.
கல்யாண் சிங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று கல்யாண் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
வயது மூப்பு, இதய மற்றும் நரம்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அவதியுறும் கல்யாண் சிங்குக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையில் அவரது உடல்நிலை மோசமாகிவருவதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கல்யாண் சிங், டாக்டர். ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் உயர் சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
கல்யாண் சிங் உத்தரப் பிரதேச முதலமைச்சர் மட்டுமின்றி ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராகவும் இருந்துள்ளார். ஆதித்யநாத்துடன் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் சுரேஷ் கன்னாவும் மருத்துவமனை சென்று கல்யாண் சிங் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
இதையும் படிங்க : 'அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் என் கனவு நிறைவேறியது' - கல்யாண் சிங்