ஹைதராபாத்: சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 இன்று (செப்.2) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல்-1-ல் ஏழு பேலோடுகள் மற்றும் அதி நவீன மென்பொருள்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
அடுத்த நான்கு மாதங்களில் 'இஸ்ரோ' திட்டமிட்டபடி, பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான லெக்ராஞ்சி பாயிண்ட் என்ற எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த எல்-1 புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வு செய்து பூமிக்குத் தகவல்களை அனுப்பவுள்ளது.
முன்னதாக சூரிய ஆய்வை மேற்கொண்ட நாடுகள்:சூரியனை சுற்றி நிகழும் மாற்றங்களை அறிவதற்கும், அதன் பண்புகளைத் தெரிந்து கொள்வதற்கும் இதுவரை 22 விண்கலங்களும், ஆய்வு சாதனங்களும் சூரியனை நோக்கிச் செலுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்காவின் நாசா, நோவா விண்வெளி மையங்களால் அனுப்பப்பட்டவை ஆகும். மேலும், கடந்த 1960ஆம் ஆண்டு முதல் 1969ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் 6 சூரிய ஆய்வு விண்கலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஜப்பானின் Hinotori (ASTRO-A);ஆனால், கடந்த 1981ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் JAXA விண்வெளி ஆய்வு மையம் சூரிய ஆய்வை மேற்கொள்ள Hinotori (ASTRO-A) என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதீத கதிர் வீச்சைப் பயன்படுத்தி சூரியனில் இருந்து வெளியேறும் காந்தப்புலம் குறித்து ஆய்வு செய்யும் நோக்கத்தில் இந்த விண்கலம் ஏவப்பட்டது.
அமெரிக்காவின் SOHO:அதனைத்தொடர்ந்து, கடந்த 1995ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா சோஹோ (SOHO) விண்கலத்தை சூரிய ஆய்வுக்காக அனுப்பத் திட்டமிட்டது. அப்போது இந்த பணியில் ஜப்பான் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளும் இணைந்து இதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புறம் மற்றும் கரோனல் பகுதியை ஆய்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, அமெரிக்கா பல்வேறு சூரிய ஆய்வுகளை மேற்கொண்டது.
சூரிய ஆய்வில் எட்டமுடியாத மைல்கல் Parker Solar Probe: இதில் முக்கியமானது, 'பார்க்கர் சோலார் ப்ரோப்' சூரிய ஆய்வு. இந்த பார்க்கர் சோலார் ப்ரோப் நான்கு ஆண்டுகளாக சூரியனின் மேற்பரப்பிற்கு மிக நெருக்கமான சுற்றுப்பாதையை உருவாக்கி வருகிறது. IRIS (Interface Region Imaging Spectrograph) சூரியனின் மேற்பரப்பை மிகத் தெளிவாகப் படம்பிடித்து வருகிறது.