தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Aditya-L1: ஆதவனை ஆய்வு செய்ய கிளம்பும் ஆதித்யா எல்1; 24 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியது!

சூரியனை ஆய்வு செய்ய "ஆதித்யா-எல்1" என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை காலை விண்ணில் செலுத்தவுள்ள நிலையில், அதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று தொடங்கியுள்ளது.

ஆதித்யா எல்1
ஆதித்யா எல்1

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2023, 5:49 PM IST

ஹைதராபாத்: சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக சூரியனை ஆய்வு செய்யும் "ஆதித்யா-எல்1" (Aditya-L1) என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் நாளை (செப்டம்பர் 2) விண்ணில் ஏவப்படவுள்ளது. ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி57 (PSLV-C57) ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சுமார் 120 நாட்கள் பயணித்து சூரியனின் சுற்றுவட்டப்பாதையை அடையும் என்றும், செயற்கைக்கோள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள 'லெக்ராஞ்ச்' என்ற புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சுமார் 424 கோடி ரூபாய் செலவில் முழுவதுமாக உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள் ஐந்து ஆண்டுகளுக்கு சூரியனை ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமாக செயல்படும் என்றும், இது சூரியனைக் கண்காணித்தல், சூரியனின் மேற்பரப்பு, சூரிய புயல் (solar wind) போன்ற விண்வெளி அம்சங்களை ஆய்வு செய்தல் போன்ற வேலைகளைச் செய்யும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்த செயற்கைக்கோளில் சூரியனை ஆய்வு செய்வதற்காக விஇஎல்சி (Visible Emission Line Coronagraph), தொலைநோக்கி, மேக்னோமீட்டர், எஸ்யுஐடி (Solar Ultraviolet Imaging Telescope) என்ற தொலைநோக்கி உள்ளிட்ட ஏழு அதிநவீன ஆய்வுக் கருவிகள் உள்ளன. இதில் நான்கு கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் என்றும், மூன்று கருவிகள் சூரியனின் வெளிப்பகுதி, துகள்கள், எல்1 பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் நாளை (செப்டம்பர் 2) காலை 11:50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான சுமார் 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று (செப்டம்பர் 1) பகல் 12.10 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் சோமநாத், “ஆதித்யா எல்1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறோம். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாராக உள்ளது. ஆதித்யா எல்1 செயற்கைக்கோளுக்கான கவுண்ட் டவுன் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 2 ஆம் தேதி விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. சந்திரயான்-3 நன்றாக வேலை செய்கிறது. அனைத்து தரவுகளும் சீராக வருகின்றன. 14 நாட்கள் முடிவில் எங்கள் பணி வெற்றிகரமாக முடிவடையும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தென்காசியில் இருந்து சூரியனுக்கு பயணம்.. ஆதித்யா எல்1 திட்ட இயக்குநரின் சுவாரஸ்ய தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details