ஹைதராபாத்: கடந்த செப்டம்பர் 2 அன்று ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால் ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு உள்ள முதல் விண்கலம் ஆகும்.
இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல பிரமுகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தனர். இதனையடுத்து ஆதித்யா எல் 1 விண்கலம் செலுத்தப்பட்டதற்கு மறுநாள் (செப் 3), ஆதித்யா எல் 1 விண்கலம் நல்ல நிலையில் இருப்பதாகவும், எப்போதும் போன்று இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில், இன்று (செப் 7) பூமி மற்றும் நிலவை ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டு உள்ள கேமரா மூலம் செல்பி எடுத்து உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது. மேலும், இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “ஆதித்யா எல் 1, சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான எல் 1 புள்ளி என்பதை இலக்காகக் கொண்டு உள்ளது. இந்த விண்கலம், பூமி மற்றும் நிலவின் புகைப்படத்தை செல்பியாக எடுத்து உள்ளது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு வெளியிடப்பட்டு உள்ள புகைப்படத்தில், VELC மற்றும் SUIT என்ற இரு பாகங்களை இஸ்ரோ சுட்டிக் காட்டி உள்ளது. இதில் VELC என்பது காணக்கூடிய உமிழ்வு வரி கரோனாகிராஃப் என்றும், SUIT என்பது சூரிய புற ஊதா உருவம் எனவும் அழைக்கப்படுகிறது.