லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்எல்ஏ அத்திக் அகமது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அத்திக் அகமது, சிறையிலிருந்தவாறே பல்வேறு கட்டப்பஞ்சாயத்து மற்றும் கொலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
ராஜூ பால் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த உமேஷ் பால் உயிருக்கு ஆபத்து இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு துப்பாக்கி ஏந்தி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த 24ஆம் தேதி உமேஷ் பால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை பாதுகாக்க முயன்ற காவலர்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், ஒரு காவலர் உயிரிழந்தார், மற்றொரு படுகாயமடைந்தார். இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உமேஷ் பால் கொலைக்கு அத்திக் அகமதுதான் காரணம் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில், உமேஷ் பால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அர்பாஸ் என்பவரை போலீசார் என்கவுன்ட்டர் செய்துள்ளனர். இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஏடிஜிபி பிரசாந்த் குமார், "உமேஷ் பால் கொலை வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பிரயக்ராஜ் மாவட்டத்தின் துமாங்கஞ்ச் பகுதியில் என்கவுன்ட்டர் நடந்தது. உமேஷ் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அர்பாஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இதுபோன்ற மாஃபியா கும்பலை ஒழித்துக்கட்ட போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதனால், இந்த மாஃபியா, குண்டர்களை பாதுகாப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்களும் குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்படுவர். இதுபோன்ற குண்டர்களை, சந்தேகத்திற்கிடமான நபர்களை பார்த்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அதோடு தகவல் தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 2 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பீகாரில் கொடூரம்