தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Odisha Train Accident : "பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்பிற்கு நாங்கள் பொறுப்பு" - கவுதம் அதானி! - அதானி குழுமம் உதவிக்கரம்

ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான செலவை அதானி குழுமம் ஏற்கும் என்று அக்குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தெரிவித்து உள்ளார்.

Adani
அதானி

By

Published : Jun 4, 2023, 8:24 PM IST

ஒடிஷாமாநிலம் பாலசோர் அருகே கடந்த 2ஆம் தேதி, கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஷாலிமார் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த பெங்களூரு - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் ரயில்களின் பெட்டிகள் தூக்கி எறியப்பட்டன. ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று மோதி நசுக்கப்பட்டன. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள், ஹவுரா ரயிலின் 2 பெட்டிகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கி இருக்கிறது. இந்த விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், தற்போது ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் விபத்தில் உயிரிழந்த 275 பேரில் 88 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இன்று(ஜூன் 4) காலை நிலவரப்படி 78 உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் ஒடிஷா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்து உள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை இன்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், வரும் 7ஆம் தேதி காலைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என்ற நோக்கில் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. படுகாயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஒடிஷா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கான செலவை அதானி குழுமம் ஏற்கும் என்று அக்குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அதானி, "ஒடிஷா ரயில் விபத்தால் நாம் அனைவரும் மிகுந்த துயரத்தில் இருக்கிறோம்.

இந்த விபத்தில் பெற்றோரை இழந்த அப்பாவி குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கான பொறுப்பை அதானி குழுமம் ஏற்கும். இந்த சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் துணையாக இருப்பதும், அவர்களின் குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதும் நம் அனைவரின் பொறுப்பாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஒடிசா ரயில்கள் விபத்தில் சிபிஐ விசாரணை - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரிந்துரை!

ABOUT THE AUTHOR

...view details