சென்னை: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா இன்று (நவ. 15) காலை உயிரிழந்தார். உடல்நலக்குறைவு காரணமாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். 80 வயதாகும் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக அறியப்பட்டவர்.
அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவரது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர். அவரது மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. மகேஷ் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினி தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இறப்பு குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”கிருஷ்ணா காருவின் மறைவு தெலுங்குத் திரையுலகிற்கு ஒரு பெரிய இழப்பு... அவருடன் 3 படங்களில் நடித்தது நான் எப்போதும் போற்றும் நினைவுகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ”தெலுங்கு சினிமாவின் சின்னமான கிருஷ்ணா காரு இப்போது இல்லை, அவரது மறைவுடன் ஒரு சகாப்தம் முடிகிறது. சகோதரர் மகேஷ் பாபுவின் துயரில் பங்கு கொள்ள விரும்புகிறேன் ஒரு தாய், சகோதரன் மற்றும் இப்போது தந்தையை இழந்த இந்த மூன்றாவது உணர்ச்சி அதிர்ச்சியை யார் தாங்க வேண்டும். அன்புள்ள மகேஷ் காருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நடிகை மீரா மிதுன் தலைமறைவு - நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கம்