பெங்களூரு: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடக் கூடாது என கர்நாடகாவில் தொடர்ச்சியாகப் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதிலும், இன்று (செப்.29) கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழில் ‘சித்தா’ என்ற திரைப்படம் கர்நாடகாவில் 'சிக்கு' என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வு பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள திரையரங்கில் நேற்று (செப்.28) நடைபெற்றது. அப்போது அங்கு வந்த கர்நாடகா காவிரி போராட்ட அமைப்பினர், தமிழ் நடிகருக்கு இங்கு என்ன வேலை என கடுமையாகப் பேசினர். இதனையடுத்து, நிகழ்வின் பாதியில் நடிகர் சித்தார்த் வெளியேறிச் சென்றார்.
இந்த நிலையில், இன்று (செப்.29) தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கு கன்னட திரைத்துறை நடிகர்கள், நடிகைகள் பலர் தங்களது ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரு குருராஜ் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் போராட்டத்தில் நடிகர்கள் சிவராஜ் குமார், உபேந்திரா, ஸ்ரீமுரளி, தர்ஷன், யோகி, சிக்கண்ணா, ஸ்ரீநாத், ஓம் சாய் பிரகாஷ், ரகு முகர்ஜி, தபலா நானி, விஜயராகவேந்திரா, ஸ்ரீனிவாஸ் மூர்த்தி, நடிகைகள் உமாஸ்ரீ, பூஜா காந்தி, அனு பிரபாகர், ரூபிகா, ஸ்ருதி மற்றும் திரைப்படக் கலைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி கலைஞர்கள், மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.