சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய நாடகங்களை மீண்டும் மேடை ஏற்ற முயற்சி புதுச்சேரி:சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு அஞ்சலியை ஒட்டி, புதுச்சேரியில் நாட்டுப்புற கலைஞர்களின் நடன நிகழ்ச்சி ஊர்வலம் நடைபெற்றது. இதில் நடிகர் நாசர், இசைக் கலைஞர்கள், தமிழ் அறிஞர்கள் ஆகியோர் பங்கேற்று, கருவடிக்குப்பத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரியில் இன்று (நவ.13) நாடக கலைஞர்கள் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவஞ்சலி விழா நடைபெற்றது. இதில், சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவப் பட ஊர்வலம், முத்தியால் பேட்டை பாரதிதாசன் மகளிர் கல்லூரி அருகிலிருந்து புறப்பட்டது.
காந்தி வீதி வழியாக வந்த இந்த பேரணியில், நாடக கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், புலி ஆட்டம், பம்பை, உடுக்கை உள்ளிட்ட நடனங்களுடன் தெருக்கூத்து கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஊர்வலத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்து கலைஞர்கள், நாடக நடிகர்கள், திரைப்படத்துறை முன்னணி பிரமுகர்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருவடிக்குப்பம் மயானத்தில் முடிவடைந்த இந்த பேரணியைத் தொடர்ந்து, சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க:வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருவூட்டல் மையம்: ககன்தீப் சிங் பேடி தகவல்
பின்பு எதிர்க்கட்சித் தலைவர் சிவா, நடிகர் சங்கத்தலைவர் நாசர் மற்றும் நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், பறை இசைக் கலைஞர்கள், பாரம்பரிய கலை குழுக்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு சங்கரதாஸ் சுவாமி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் நாசர், “நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் குழுவிலிருந்து வந்தவர்களால், இன்றைய திரைத்துறையின் ஆளுமை உள்ளது. தமிழில் சினிமா உருவாகும் போது அவரது குழுவிலிருந்து வந்தவர்கள் தான், சினிமாவில் கோலோச்சினார்கள். தற்போது, அவர் எழுதி தந்த நாடகங்களை மேடை ஏற்றும் முயற்சியை எடுத்து வருகிறோம். இவ்வாண்டு அவரது நாடக விழா நடக்கும்” என்றார்.
இதையும் படிங்க:சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றும் பணி தீவிரம்.. இதுவரை அகற்றப்பட்ட கழிவுகள் எவ்வளவு தெரியுமா?