ஹைதராபாத்:பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடித்து வருகிறார். ரவுடி ரத்தோர், ஹவுஸ்ஃபுல்2, ஹாலிடே, ஓ மை காட், ஏர்லிஃப்ட் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் 'எந்திரன்-2' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார். பல மொழிகளிலும் நடித்து புகழ் பெற்ற நடிகரான திகழ்ந்த போதிலும், இவர் இந்திய குடியுரிமை அற்றவர் என்ற விமர்சனம் எழுந்து வந்தது.
பல தேசபக்தி சார்ந்த படங்களில் நடித்தாலும், இந்த குடியுரிமை விமர்சனம் அக்ஷய் குமாரை தொடர்ந்து வந்தது. இந்திய குடியுரிமை இல்லாமல் இங்கு வாழ்ந்து வருகிறார் என்றும், கனடா நாட்டின் குடியுரிமையை மட்டுமே வைத்திருக்கிறார் என்றும் பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர். குறிப்பாக நாட்டைப் பற்றி ஏதேனும் கருத்துக் கூறும்போது இது சார்ந்த விமர்சனங்கள் எழுந்தன.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அக்ஷய் குமார், தனது கனடா குடியுரிமையை துறக்கப்போவதாக தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில், "சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் எனக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வி அடைந்தன. நான் மனமுடைந்து இருந்தேன். அப்போது, கனடாவில் உள்ள எனது நண்பருடன் சென்று வசித்தேன். அப்போதுதான் கனடா குடியுரிமையைப் பெற்றேன். பின்னர் எனது படங்கள் வெற்றியடைந்த பிறகு மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிவிட்டேன். அதன் பிறகு இந்தியாவில் இருக்க முடிவு செய்தேன். இந்தியாவில்தான் நான் வாழ்கிறேன், இந்தியாதான் எனக்கு எல்லாமே. அதனால், கனடா குடியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளேன். அதேபோல், இந்தியாவில் பாஸ்போர்ட் வாங்கவும் விண்ணப்பம் செய்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் அக்ஷய் குமார், தான் இந்திய குடியுரிமையை பெற்றுவிட்டதாக இன்று(ஆகஸ்ட் 15) அறிவித்துள்ளார். இந்திய குடியுரிமை பெற்றதற்கான சான்றிதழின் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், "இதயமும் குடியுரிமையும் இந்தியன்தான். இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள், ஜெய் ஹிந்த்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வாழ்த்து கூறி வருகிறார்கள். கனடா குடியுரிமை பெற்றதற்காக சமூக வலைதளங்களில் விமர்சனங்களை சந்தித்து வந்த அக்ஷய் குமாருக்கு தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: "கிராமங்களில் தான் குறை இருக்கிறது" - நாங்குனேரி சம்பவத்தை சுட்டிக்காட்டி சேரன் பேச்சு