புது டெல்லி: பாலியல் புகாரில் சிக்கிய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பதவி விலக வேண்டும் என மத்தியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரர்கள் நடத்திய போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இருப்பினும் அவர் மீது முறையான நடவடிக்கையோ அல்லது விசாரணையோ மேற்கொள்ளாததை கண்டித்து ஒலிம்பிக் உள்பட சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை, ஹரித்வாருக்கு பேரணியாக சென்று கங்கை நதியில் வீசப்போவதாக, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்னைகள் அறிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிராக ஏராளமான விமர்சனங்களை முன் வைத்தனர். இதன் அடிப்படையில் வீராங்கணைகளின் புகாரின் பேரில் டெல்லி காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
இது குறித்து விளக்கமளித்த சிறப்பு புலனாய்வுக் குழு, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரில் சம்பந்தப்பட்ட 7 பெண்கள், ஒரு சிறுமி உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, அவர் மீது வழக்குகள் தொடரபட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இச்சம்பவம் குறித்து இதுவரையிலும் 180க்கும் மேற்பட்டோரை விசாரித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். இது குறித்தான முழு அறிக்கையயும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனத் தெரிவித்து உள்ளனர்.