புதுச்சேரி உழவர்கரை சட்டப்பேரவைத் தொகுதி அரும்பார்த்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மலா. கணவரை இழந்த இவர், தனது தாய் மற்றும் மகளுடன் வசித்துவருகிறார். புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இந்த தொடர் மழையின் காரணமாக இவர்கள் வசித்துவரும் வீட்டின் சுவர் ஈரப்பதத்தால் பாதிப்படைந்தது.
இந்நிலையில்,புதன்கிழமை நள்ளிரவு இவர்கள் வசித்து வந்த வீட்டின் ஒரு பகுதி மேல் கூரை ஒடுகள் திடீரென இடிந்து விழுந்தது. சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டு சுவரும் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் வீட்டின் முன்பகுதியில் அமைந்திருந்த மளிகை கடையும் முற்றிலும் சேதமடைந்தது.