பிரதாப்கர் :உத்தர பிரதேசத்தில் டெம்போ மீது டேங்கர் வாகனம் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். உத்தர பிரதேச மாநிலம் விக்ரம்பூரில் இருந்து, டெம்போ வாகனத்தில் 15 பேர் பிரதாப்கர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். மோகன்கஞ்ச் மார்க்கெட் அருகே டெம்போ வாகனம் சென்று கொண்டு இருந்தது.
அதேபோல், எரிவாயு டேங்கர் வாகனம் ஒன்று மோகன்கஞ்ச் மார்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் எதிர்திசையில் வந்த டெம்போ வாகனம் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் டெம்போ வாகனத்தில் பயணித்த 8 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நிகழ்விடத்தில் மீட்பு பணியில் ஈடுபட அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் எரிவாயு டேங்கரில் எந்த வித சேதாரமும் ஏற்படாததால் பெரும் விபத்து மற்றும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.