டெல்லி: அதானி நிறுவனங்களில் ஏறத்தாழ 15ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அபுதாபியைச் சேர்ந்த சர்வதேச பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு முதலீட்டு நிறுவனங்கள் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹிண்டன்பர்க் தடயவியல் மற்றும் நிதி நிலை ஆலோசனை நிறுவனம், கடந்த ஜனவரி 24ஆம் தேதி, ஒரு அறிக்கையை வெளியிட்டது. சர்வதேச சந்தையில் அதானி குழுமம் செய்யும் தில்லுமுல்லுகள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை வெளிநாடுகளில் உள்ள போலி ஷெல் நிறுவனங்கள் மூலம் உள்நாட்டில் அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்ய வைத்து செயற்கையாக அதானி குழுமத்தின் பங்குமதிப்பை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்தது.
மேலும், அதானி குழுமத்திற்கு எதிராக ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆராய்ச்சி நிறுவனம் தொடுத்தது. அதானி குழுமத்தின் பொது வெளியிட்டு நேரத்தில் ஆராய்ச்சி அறிக்கை வெளியானதால், அதன் பிரதிபலிப்பு பங்குச்சந்தையில் எதிரொலித்தன. இதனால் பங்குச்சந்தையில் லிஸ்ட் ஆகி உள்ள அதானி குழும நிறுவனங்களில் பங்குகள் அதளபாதாளத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டது.
மேலும், ஹிண்டன்பெர்க் நிறுவனம் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதானி குழுமம் அறிவித்தது. இதனிடையே ஆய்வு அறிக்கையில் உள்ள கேள்விகளில் ஏறத்தாழ 62 கேள்விகளுக்கு அதானி நிறுவனத்தின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக அதானி குழுமம் 413 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், அதானி நிறுவனத்தின் பொது வெளியீட்டில் முதலீடு செய்ய அபுதாபியைச் சேர்ந்த நிறுவனம் முனைப்பு காட்டி உள்ளது. அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச ஹோல்டிங் கம்பெனி எனப்படும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு முதலீட்டு நிறுவனங்கள் ஏறத்தாழ 14ஆயிரத்து 500 கோடி ரூபாயை அதானி குழும நிறுவனங்கள் மீது முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை முதலீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி(பசுமை ஆற்றல்) நிறுவனம், அதானி எண்டர்பிரைசஸ், அதானி மின் விநியோகம் நிறுவனங்கள் மீது 15 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி மின்விநியோக நிறுவனங்களில் தலா 3 ஆயிரத்து 850 கோடி ரூபாயும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீது 7 ஆயிரத்து 700 கோடி ரூபாயும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அபுதாபி நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்குள் முதலீடுகள் தொடர்பான பரிவர்த்தனைகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
அதானி குழும நிறுவனங்களின் வளர்ச்சியை அதிகரிக்கவும், நிதி நிலையை மேம்படுத்தவும் இந்த முதலீட்டை பயன்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் சர்வதேச ஹோல்டிங் நிறுவனத்துடன் தனது வர்த்தகத்தை இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அதானி குழும நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:Pakistan blast: மசூதியில் குண்டுவெடிப்புக்கு 32 பேர் பலி.. ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதல்!