ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுமன் மீனா என்ற இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 22ஆம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றார். ஆனால், மாலை வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் அனுமன் வராததால், அவரது குடும்பத்தினர் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சங்கனேர் என்ற இடத்தில் அனுமனின் இருசக்கரவாகனம் மட்டும் கிடந்தது. இதைக் கண்ட குடும்பத்தினர் பதற்றத்திற்கு ஆளாகினர்.
சிறிது நேரம் கழித்து, அனுமனின் செல்போன் எண்ணிலிருந்து அவரது குடும்பத்தினருக்கு வீடியோ கால் வந்தது. அதில், மர்மநபர்கள் சிலர் அனுமனை கட்டிப் போட்டு வைத்திருந்தனர். அனுமனை விடுவிக்க வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அடுத்த மூன்று நாளைக்குள் பணத்தை தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல் இது தொடர்பாக காவல்துறையினரிடம் தெரிவித்தால் அனுமனை கொண்டு விடுவோம் என்றும் எச்சரித்துள்ளனர்.
ஆனால், கடந்த 23ஆம் தேதி அன்று அனுமனின் தந்தை, மகனைக் மர்மகும்பல் கடத்தி வைத்திருப்பதாக சங்கனேர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விவகாரம் காவல்துறைக்கு சென்றதை அறிந்த கடத்தல் கும்பல் ஆத்திரமடைந்து, அனுமனை கொலை செய்துள்ளது.
பின்னர், உடலை சாக்கு மூட்டையில் கட்டி திரவியவதி ஆற்றில் விசியுள்ளனர். இதையடுத்து, கடத்தல் காரர்களை தேடும் பணியை காவல் துறையினர் தீவிரப்படுத்தினர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தெரிகிறது.