டெல்லி: தலைநகர் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும், துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே காணப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வரும் நிலையில், கடந்த ஆண்டு நடந்த மாநகராட்சி தேர்தலிலும், பா.ஜ.க.வை பின்னுக்குத் தள்ளி 15 ஆண்டுகளுக்குப் பின் முதல்முறையாக வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது.
இதனால், ஆளுநருக்கும், அரசுக்குமான உறவில் கூடுதல் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மதுபான ஊழல், சிறையில் உள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் குறித்த வீடியோக்கள் என தொடர்ச்சியாக அரசுக்கு ஆளுநர் தரப்பு மற்றும் மத்திய அரசு கடுமையாக நெருக்கடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நடப்பு ஆண்டின் முதல் சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன் டெல்லியில் துவங்கியது. கூட்டம் தொடங்கிய நாளே ஆளுநர் குறித்த கடுமையான விமர்சனங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்தார். மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர் தனக்கு தலைமை ஆசிரியர் போல் செயல்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டெல்லி சட்டப் பேரவைக் கூட்டத்தில் புதிதாக பூதாகரம் வெடித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று (ஜன.18) நடந்த 3-வது நாள் சட்டப் பேரவை கூட்டத்திற்குப் பெட்டியுடன் நுழைந்த ஆம் ஆத்மி கட்சி ரிதாலா தொகுதி எம்.எல்.ஏ. மொகிந்தர் கோயல், பெரும் குண்டை போட்டு உடைத்தார்.
ரோகினி பகுதியில் உள்ள அரசின் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் செவிலியர் உள்பட மருத்துவப் பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாகவும், பெரும் தொகையை தனியார் ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் பெற்று ஊழல் செய்து உள்ளதாகவும் தெரிவித்தார்.