பெங்களூரு : நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த சர்கார் பட பாணியில், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக அமெரிக்காவில் பணிபுரியும் பெண் ஒருவர், தனது சொந்த ஊர் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று (மே. 10) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜயின் 'சர்கார்' பட பாணியில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க பெண் ஒருவர் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர் வந்துள்ளார். பசவங்குடி தொகுதியைச் சேர்ந்தவர், மேகனா. அமெரிக்காவில் பணிபுரியும் மேகனா, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து இந்தியா வந்து உள்ளார்.
வெற்றிகரமாக தனது வாக்கைப் பதிவு செய்த மேகனா, வாக்களிப்பது தான் ஒரு குடிமகனின் சிறந்த கடமை எனக் கூறுகிறார். அதேநேரம் மேகனாவை போன்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 15 ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து ராகவேந்திரா என்பவர் இந்தியா வந்து உள்ளார்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து வாக்களிப்பதற்காக இந்தியா வந்த ராகவேந்திராவின் ஆசை நிராசையாக போனது. வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததைக் கண்டு ராகவேந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ராகவேந்திரா முறையிட்டும் பயன்இல்லை என அவர் கூறுகிறார்.
இதனிடையே சவதாட்டி யல்லம்மா தொகுதியில் வாக்களிக்க வந்த மூதாட்டி திடீரென மயக்கம் போட்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. யரசர்வி கிராமத்தைச் சேர்ந்த 68 வயதான மூதாட்டி பரவ ஐஸ்வரா சிந்தனலா, வாக்குச் சாவடியில் வரிசையில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டுப் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல், ஹசன் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்த ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பெலூர் தாலுகா சிக்கோலே கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான ஜெயண்ணா, வாக்களிப்பதற்காக வரிசையில் காத்திருந்துள்ளார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மயங்கி சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சம்பவம் வாக்காளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :Karnataka Election 2023: நண்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குப்பதிவு!