சிவமோகா (கர்நாடகா):சிவமோகாவில் நடந்த வன்முறைச்சம்பவத்தில் இளைஞரைக் கத்தியால் குத்திய சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியை இன்று(ஆகஸ்ட் 16) காலை காவல் துறையினர் காலில் சுட்டுபிடித்தனர். வினோப்நகர் காவல் நிலைய காவல் அலுவலர் முஞ்சுநாத் மீது தாக்குதல் நடத்த முயன்றபோது குற்றவாளி சுடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று (ஆகஸ்ட் 11) சிவமோகா நகரில் உள்ள எம்கேகே சாலையில் வைத்து பிரேம்சிங் என்ற இளைஞர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய முக்கியக்குற்றவாளியான முகமது அலியாஸ் சர்பி(30) தீர்த்தஹள்ளி சாலையில் உள்ள ஃபலாக் சமுதாயக் கூடத்தில் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்த தகவலையடுத்து விரைந்த காவல் அலுவலர் முஞ்சுநாத் குற்றவாளி முகமதை பிடிக்க முயன்ற போது, குற்றவாளி அலுவலரைத் தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மஞ்சுநாத் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் முகமதின் காலில் சுட்டுள்ளார். முகமதின் வலது காலில் காயம் ஏற்பட்டதால், தற்போது மெகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக சிவமோகாவில் ஏற்பட்ட கலவரச் சம்பவத்தால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.