கிழக்கு கோதாவரி(ஆந்திரா): ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த கிரண் என்பவர், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மல்லம்பூடி என்ற பகுதியில் கழுதைப் பண்ணை வைத்துள்ளார். இந்த கழுதைப் பண்ணை மூலம் கிடைக்கும் கழுதைப்பாலை விற்பனை செய்து, லட்சக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறார்.
இதுகுறித்து கிரண் கூறுகையில், "ஒரு முறை எனது மகனுக்கு ஆஸ்துமா ஏற்பட்டது. அப்போது குழந்தைக்கு கழுதைப்பால் கொடுக்கும்படி பெரியவர்கள் கூறினர். அதன்படி கழுதைப்பால் கொடுத்ததும், மகனுக்கு குணமடைந்தது. அப்போது கழுதைப்பாலில் உள்ள மருத்துவ குணங்களும், அதன் விலையும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தன. இதனால், கழுதைகளை வளர்க்க முடிவு செய்தேன்.
குஜராத், உத்தரப்பிரதேசம், பிகார் எனப்பல்வேறு மாநிலங்களுக்குச்சென்று கழுதைகளை வாங்கி வந்து, மல்லம்பூடியில் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கழுதைப்பண்ணையைத் தொடங்கினேன். இதில், குஜராத்தைச் சேர்ந்த அலரி, மகாராஷ்டிராவைச் சேர்ந்த கட்வாட் என பல்வேறு இனங்களைச் சேர்ந்த 120 கழுதைகளை வளர்த்து வருகிறேன்.