ராம்பூர் :இமாச்சல பிரதேசத்தில், ஆப்பிள் ஏற்றுமதி தடைபட்டு உள்ளதால் உள்ளூர் சந்தையில் போதிய விலை கிடைக்காத விரக்தியில் விவசாயிகள் ஆற்றில் ஆப்பிள் பழங்களை கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் கன மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச் சரிவு மற்றும் மலைகளில் இருந்து பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு உள்ளதால் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன.
ராம்பூர், பலசான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை போக்குவரத்து மேற்கொள்ள முடியாமல் தனித் தீவுகள் போல் காட்சி அளிக்கும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. தற்போது ஆப்பிள் சீசன் தொடங்கி உள்ள நிலையில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதால், அண்டை மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஆப்பிள் பழங்களை ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.
மேலும், உள்ளூரிலும் ஆப்பிள் பழத்திற்கு போதிய அளவில் விலை கிடைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், விவசாயிகள் கடும் விரக்திக்கு ஆளாகி உள்ளனர். உள்ளூர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களின் விலை சரிவு, விவசாய பணிகளுக்கான செலவுகளை கூட திரும்ப எடுக்க முடியாத வகையில் ஆப்பிள் பழத்தின் விலை ஆகிய காரணங்களால் வேதனைக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில் போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த ஆப்பிள் பழங்களை ஆற்றில் கொட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மினி லாரியில் கூடை கூடைகளாக இருந்த ஆப்பிள் பழங்களை விவசாயிகள் ஆற்றில் கொட்டுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேநேரம் விவசாயிகளின் இந்த அவல நிலைக்கு மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என மாநில பாஜக தலைவர் விமர்சித்து உள்ளார். விவசாயிகள் ஆற்றில் ஆப்பிள் பழங்களை கொட்டும் வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ள மாநில பாஜக செய்தி தொடர்பாளர் சேத்தன் சிங் பிரகதா, மாநிலத்தில் சீரமைப்பு பணிகளை காங்கிரஸ் கட்சி விரைவாக மேற்கொள்ளாததால் விவசாயிகள் கடும் நஷ்டசத்திற்கு ஆலாகி இருப்பதாக விமர்சித்து உள்ளார்.
இதையும் படிங்க :"மன் கி பாத் வேண்டாம்... மணிப்பூர் கி பாத் வேண்டும்" - பிரதமரிடம் முறையிடும் சிறுமி!