தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரள சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - புனித யாத்திரை சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம் - முதலமைச்சர் இரங்கல்! - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 2, 2023, 1:30 PM IST

கேரள சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து - புனித யாத்திரை சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

தஞ்சாவூர் : கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சுற்றுலா சென்ற பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணித்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பேருந்து சென்று கொண்டு இருந்தது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே அதிகாலை வேளையில் சுற்றுலாப்பேருந்து சென்று கொண்டு இருந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலைப்பொழுதில் விபத்து ஏற்பட்டதால் மீட்புப் பணியில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 63 வயதான மூதாட்டி லில்லி மற்றும் 9 வயது சிறுவன் ரியான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பேருந்து இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி புறப்பட்ட இந்த சுற்றுலா பேருந்து தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமம் அருகே சாலை வளைவில் திரும்பும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

பேருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 51 பேரும் நிலைகுலைந்தனர். விபத்து நடந்த போது அதிகாலை வேளை என்பதால் ஓட்டுநர் கண் அயர்ந்து இருக்கலாம் என்றும், அதனால் விபத்து நேர்ந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த லில்லி மற்றும் சிறுவன் ரியான் ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து ஒரத்தநாடு டிஎஸ்பி பிரசன்னா, போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கோர விபத்தால் ஒரத்தநாட்டில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு வழிபாட்டிற்காக கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலா வாகனம் இன்று (ஏப்ரல். 2) அதிகாலையில் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஒக்கநாடு கீழையூர் கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லில்லி (வயது 63) மற்றும் ரியான் (வயது 9) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் மெர்சி (வயது 54) மற்றும் அஜித் (வயது 24) ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் குருத்தோலை பவனி!

ABOUT THE AUTHOR

...view details