ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்திலுள்ள ஹைதராபாத்தில் மருத்துவத்துறையில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தவர், ப்ரீத்தி (26). இவரை சீனியர் மாணவர்கள் துன்புறுத்தியதன் காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த ப்ரீத்தி நேற்று (பிப்.26) உயிரிழந்தார்.
இதனையறிந்த அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், ப்ரீத்தி தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறி மருத்துவமனை வளாகத்தில் ப்ரீத்தியின் உடலை வாங்கவிடாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை சமாதானம் செய்த நிலையில் ப்ரீத்தி உடலை உடற்கூராய்வுக்கு அனுப்பினர்.