காத்மண்டு :வடமேற்கு நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 140 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று (நவ. 3) நள்ளிரவு வடமேற்கு மாவட்டங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளி 6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில், ஜாஜர்கட், ருக்கும் உள்ளிட்ட இடங்களில் கடுமையான சேத விளைவுகளை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ருக்கும் உள்ளிட்ட பல்வேறு மலைப் பிரதேச மாவட்டங்களில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருப்பதாகவும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது.
ருக்கும் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 35 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இடிந்து தரைமட்டமான கட்டிட சிதைவுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக மீட்பு படை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
ஜாஜர்கோட் மாவட்டத்தில் 34 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிளைவுகள் குறித்த முழுத் தகவல்கள் வெளியிடப்படவில்லை. பல்வேறு இடங்களில் தொலைத் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் தனித் தீவுகளாய் நிவாரணத்திற்காக தவித்து வருகின்றனர்.